Tuesday, 18 September 2012

கோவா பயணம் - 03


புனித சவேரியார் ஆலயத்திற்கு நேர்எதிரே சற்று தொலைவில் 16 ஆம் நூற்றாண்டின் புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் உள்ளது. 1572 இல் கட்டப்பட்டு, தாழ்வாரங்கள், தூண்கள், காட்சியகங்கள், பல அறைகள், அலுவலகம், துறவி மடம், உணவு கூடம், விருந்தினர் விடுதி, மற்றும் மருத்துவமனை கொண்ட மண்டபங்கள் என்று விரிவடைந்திருக்கின்றன.இதை 1835 இல் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1846 இல் இந்த தேவாலயத்தின் முக்கியப் பகுதி சரிந்தது.பலவாறும் சிதைந்து போய், இன்று வெறும் கட்டமண் சுவர்களாக நிற்பதைத்தான், தற்போது இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பராமரித்து வருகிறது.பழமையை, வரலாற்றை அறிய ஆசைப்படும் மனங்களுக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்லக் காத்திருக்கிறது இவ்வளாகம்.
அங்கிருந்து அகுடாகோட்டைக்குச் சென்றோம். அகுடாகோட்டை டச்சு மற்றும் மராட்டியர்களின் படையெடுப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு கருதி 1612இல் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையின் சுவர்கள் 5 மீட்டர் உயரமும் 1.3 மீட்டர் அகலமும் கொண்டது.
“அகுடா” என்றால் பெறப்பட்ட, தண்ணீர் என்று பொருள். கோட்டைக்குள் இருக்கும் நன்னீர் வசந்த காலத்தில் நிறுத்தப்படும் கப்பல்களுக்கு விநியோகிக்கப்படும். கோட்டையின் இன்னொரு சிறப்பம்சம் உள்ளே 13 மீட்டர் உயர கலங்கரை விளக்கம் உள்ளது.1864 இல் கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தில் ஆரம்பத்தில் ஓர் எண்ணெய் விளக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டதாம். அதன் பின்னர் 1976 இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  பழைய கோவாவில் உள்ள புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் இடிபாடுகளிருந்து பெறப்பட்ட மிகப் பெரிய மணி இங்குதான் இருந்திருக்கிறது.அது 1871 இல் பனாஜி தி இம்மாகுலேட் கன்செப்ஷன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஹாலங்குட் கடற்கரைக்குச் சென்றோம். பிற்பகல் வெயிலில், அகன்ற மணல்பரப்பைத் தாண்டி இருந்த கடற்கரையில் அதிகமான மக்கள் அலை. பாரா சூட்டில் பறப்பது,கடலில் மோட்டார் பைக்கில் செல்வது போன்ற விளையாட்டுக்கள் சுவரஸ்யமானவை.இவை வெளிநாட்டவரை மிக எளிமையாகக் கவர்கிறன. பாராசூட்டிற்காக ஆள்பிடிக்கும் புரோக்கர்களும் அக்கடற்கரையில் அலைகின்றனர். ஒரு ட்ரிப்புக்கு ரூ.500/- வாங்குகிறார்கள். பாராசூட்டில் பறப்பவர்களை கடல் நீரில் தோய்த்து மீண்டும் பறக்க வைப்பது நம்மைப் போன்ற பார்வையாளருக்கே மயிர்கூச்செரிவதாக உள்ளது. அருகில் சென்று பார்த்தால், பாராசூட் சாதாரண நைலான் கயிறுகளாலேயே கட்டப்பட்டிருக்கிறது. மோட்டார் படகை இணைப்பதும் இதே கயிறுதான். இது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்குமென்று நமக்குத் தோணவில்லை.
தமிழகக் கடற்கரைகளில் குறிப்பாக, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி போன்ற ஊர்களில் உள்ள கடற்கரைகளில் சொரசொரப்பான பாறைகள், ஆழமான பகுதிகள், பெரிய அலைகள் இருக்கின்றன. இங்கு அந்தப் பயம்வேண்டாம். ஏனெனில், சிறு சிறு தீவுகளும் சுற்றிக் கடலுமாக இருப்பதால் – ஆழமற்றதும், பெரும் அலைகளற்றதுமாகவே உள்ளன. அங்கு வெளிநாட்டவர் சூரியக்குளியல் எடுப்பதற்காக சாய்வான மரப்படுக்கைகள் உள்ளன. நமக்கு வெயிலில் வியர்வை சொட்டுகிறது. ஆனால் அவர்களோ சுகமாகப் படுத்திருக்கிறார்கள்.அதன் அருகிலேயே மதுபான வசதியுடன் கூடிய ஹோட்டல் இருக்கிறது.(இது எல்லா பீச்சிலும்,சாலையிலும்தான்!). அங்கு அமர்ந்திருந்த ஆங்கிலேய ஜோடியில், அவன் மதுப்பாட்டிலை ஓப்பன் செய்து கிண்ணத்தில் ஊற்றித்தர, அவளோ ஒரு கையில் மதுக்கிண்ணமும், மறுகையின் விரலிடுக்கில் சிகரெட்டைத் தாங்கியவளாய், ஸ்டைலாக புகையை மேல் நோக்கி ஊதிக் கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்; அவனோ மதுவைக் குடித்துக்கொண்டே மாதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
ங்கிருந்து வெளியே வந்த போது, நடைபாதை வண்டியில், செங்குத்து ஸ்டீல் வலைக்குள் அதி வேகமாக நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் அடுப்பில், நேரே நின்று சுழலும் கம்பியில் சொருகி வைக்கப்பட்ட சிக்கன் சதைகள் வெந்து கொண்டிருந்தன. அவற்றைக் கீறி, சிறு சிறு துண்டுகளாக்கி தக்காளி மற்றும் கேரட் போன்ற துண்டுகளைக் கலந்து, பிரெட் அல்லது சப்பாத்தியுடன் தருகிறார்கள். அங்கு கூட்டம் மொய்க்கிறது. அது உடலுக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.
ஐஸ் வண்டி, தொப்பிக் கடை, டிசர்ட் கடை,… பார்த்துக்கொண்டே போகையில், வரிசையாக நிறுத்தியிருந்த விதவிதமான டூவீலர்கள் ஏராளம். சுற்றுலா வருபவர்கள் வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்கள். நாள் வாடகை ரூ.200/- முதல் ரூ.400/- வரை. ஆக்டிவாவுக்கு ரூ.200/- பஜாஜ் அவென்ஜருக்கு ரூ.400/-, அதாவது வாடகை – வண்டியைப் பொருத்து. நம் அடையாள அட்டையைக் காண்பித்து, விரும்பிய வண்டியைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

கோவா பயணம்-02


கோவா இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். இது வடக்கில் தெரகோல் ஆறு(கோவாவை மகராஷ்டிரத்திலிருந்து பிரிப்பது), தெற்கில் கர்நாடகம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலை, மேற்கில் அரபி கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கோவாவின் மொத்தப் பரப்பளவு 3,702 ச.கி.மீ. இங்கு பேசப்படும் மொழிகள் கொங்கணி, மராத்தி. கோவாவின் மொத்த மக்கள்தொகை 14,57,723. இதில் 65%இந்துக்களும், 26%கிறிஸ்தவர்களும், 6%இஸ்லாமியர்களும், மற்றவர்கள் 3% ம் உள்ளனர்.போர்த்துக்கீசியத்தைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்பவர் 1498ல் இந்தியாவுக்கு கடல் வழிப் பாதையைக் கண்டறிந்து கேரளா(கோழிக்கோடு அருகிலுள்ள காப்பக்கடவு)வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து போர்த்துக்கீசியர்களும் வந்தனர். 1510இல் அல்போன்சா டி அல்புக்கிர்க் என்னும் போர்த்துக்கீசியர் விஜய நகர அரசு உதவியுடன் கோவாவைக் கைப்பற்றினார். கோவாவில் இருந்து கடல்வழி வர்த்தகம் தொடங்கியது.
அதே போல் போர்த்துக்கீசியத்தில் இருந்து 1542ல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சேசு சபைத் துறவி பிரான்சிஸ் சவேரியாரின் வருகைக்கு பின் கிறிஸ்தவம் பரவியுள்ளது.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், கோவா போர்த்துக்கீசியர் வசமே இருந்துள்ளது. 1961இல் ஆபரேசன் விஜய் என்னும் ராணுவ நடவடிக்கை மூலம் போர்த்துக்கீசியரிடமிருந்து கோவா மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோவாவில் வாஸ்கோடகாமா பெயரில் ஓர் ஊர் ஒன்றும் இன்று உள்ளது. இனி கோவாவில் பார்த்த சர்ச்சுகள் மற்றும் இடங்கள் பற்றிக் கூறுகிறேன்.பழைய கோவா ‘கிழக்கின் ரோமாபுரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் தவிர மற்றவர்கள் கண்ணில் அதிகம் படாத கடற்கரையில் இருக்கிறதுகாஜேட்டான் தேவாலயம் (Church of St. Cajatan). தியேட்ரின் குருமரபைச் சேர்ந்த முதல் குருவான புனித காஜேட்டான் அவர்களின் நினைவாக, 1661ல் இத்தாலியச் சிற்பிகளால் ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வடிவில் கட்டப்பட்டுள்ள புனித உபகாரஅன்னையின் தேவாலயம் இது. ரோம் புனித பீட்டர்ஸ் தேவாலயம் இதைவிட ஆறுமடங்கு பெரியது என்கிறார்கள். ஆனால், காஜேட்டான் ஆலயமே உள்ளே நுழையும் போது நம்மைப் பிரமிக்க வைக்கிறது.கத்தீட்ரல் தேவாலயம் (St. Catherine’s’ Cathedral)மிகப் பெரிய ஒன்று. 35.56 மீட்டர் உயரமும், 76.2 மீட்டர் நீளமும், 55.16மீட்டர் அகலமும் உடையது. போர்த்துக்கீசியர்களின் அடையாளமாக விளங்க வேண்டும் என்பதற்காக போர்த்துக்கீசிய அரசர் டாம் செபஸ்டியோ 1562 ஆம் ஆண்டில்மிகப்பெரிய தேவாலயம் கட்ட ஆணை பிறப்பித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்து கோவாவை ஆட்சி செய்த வைசிராய்களால் ஆலயம் கொஞ்சம்கொஞ்சமாக எழுப்பப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் உட்புறங்களில் கலை வேலைப்பாடுகள் நம் கண்களை வியக்க வைக்கின்றன.இதன் பின்புறம் உள்ள தொல்பொருளார் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தின் பல்வேறு கலை நுட்பமும் நாம் அவசியம் காண வேண்டியதே!கத்தீட்ரல் தேவாலயத்தின் இடப்புறத்தில் சுமார் நூறு மீட்டர் தூரத்தில் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது. புனித பிரான்சிஸ் சவேரியார் 1552ஆம் ஆண்டு இறையடி சேர்ந்த பின்பு, அவரது பதப்படுத்தப்பட்ட உடல் இவ்வாலயத்தில்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.எனவே, இவ்வாலயம் இன்று புனித சவேரியார் தேவாலயம் என்றே அறியப்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகமான ஆலயங்களில் ஆல்டரின் இரு பக்கங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள பழைய ஓவியங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. பல சர்ச்சுகளின் அருகிலேயே  தொல்பொருளாரின் ஆர்ட் காலரி, அருங்காட்சியகம் இருக்கின்றன, தவறாமல் பார்க்க வேண்டும்.

கோவா பயணம் - 01


கோவா பயணம் நெல்லையிலிருந்து கிளம்பும் ஹாப்பா எக்ஸ்பிரஸில் காலை 5.55 மணிக்குத் தொடங்கியது. கொங்கன் ரயில்வேயில் பகலில் செல்லும் பயணம் மிக அருமையாக இருந்தது. மலைகளும்,குகைகளும்,மரங்களும்,நீரோட்டங்களும் அப்பப்பா….!ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் இயற்கை வளமும்,செழிப்பும் குறித்து பெருமிதம் கொள்ள முடியும்.கேரளாவிற்குச் செங்கோட்டை, போடி மெட்டு, கம்பம் மெட்டு, வால்ப்பாறை போன்ற வழிகளில் செல்லும் போது தேயிலைத் தோட்டமும், தொழிலாளர்கள் வீடுமாகத்தான் தெரியும்.அதிக ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பு கொண்ட மாநிலம் போலத் தோன்றும்.
ஆனால், திருவனந்தபுரம் வழியாக இத்தடத்தில் பயணம் செய்யும் போது, கொல்லம் முதல் கோழிக்கோடு தாண்டியும் – கேரளா இயற்கைச் செழிப்பும், மக்கள் வாழ்க்கை செழிப்பும் கொண்டதாகவே இருக்கிறது.
ஒவ்வொரு ஊர்களிலும் அலங்கரிக்கப்பட்ட அங்காடிகள் அதிகமாக இருப்பது, அவர்களின் மிகுதியான நுகர்வுக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது. ஆலப்புழா, கொச்சின், எர்ணாக்குளம் போன்ற ஊர்களைத் தனி ட்ரிப்பாக வந்து பார்க்கவேண்டும் என்ற அவா பிறக்கிறது. போகும் வழியெல்லாம் எண்ணற்ற ஆறுகள் குறுக்கே செல்கின்றன.
                                           
அனைத்துஆறுகளும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி அரபி கடலில் கலப்பதற்கு மேற்கு நோக்கியே பாய்கின்றன. தமிழகத் தளப்பகுதி போல வறண்ட பகுதி கொஞ்சமேனும் எங்கும் காண முடியவில்லை. கண்ணில் படுவதெல்லாம் தென்னை,தென்னை,தென்னை! மீதம் பலா,வாழை,கமுகு! ஒவ்வொரு வீடும் இன்ப வனமாகக் காட்சியளிக்கிறது.
கண்ணனூர், காசாரக்காடு தாண்டியவுடன் இருட்டத்தொடங்கியது. தொலைதூர வண்டிகளில் உள்ளது போன்ற பான்ரிக்கார் இந்த ஹாப்பா எக்ஸ்பிரஸில் இல்லை(எதிர்காலத்தில் இணைக்கப்படலாம்). எனவே நினைத்தபோது குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ ஏதும் வாங்க முடிவதில்லை. வாடிக்கையாக வருபவர்கள் உணவு,ஸ்நாக்ஸ் எல்லாம் தயாராக கையில் எடுத்து வந்து விடுகிறார்கள். ஆனால்,நம்மைப் போன்றவர்களுக்கு சில நேரங்களில் தண்ணீர்,டிபன் வாங்குவதுகூட சிரமமாகிவிடுகிறது. அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது வண்டி. இரண்டு மணிநேரம் தாமதம் என்றார்கள்.
அங்கிருந்து பழைய கோவாவிலுள்ள சவேரியார் ஆலயத்தோடு இணைந்துள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினோம். காலையில் சவேரியார் ஆலயத்தில் தமிழ்த் திருப்பலியை நம் தந்தை ஆற்றியபின், கோவாவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். போகும்முன் கோவாவைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளது நன்று.

Monday, 17 September 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் திரு இருதயராஜ், திருமதி ராஜம் இல்லம்




 16-9-2012   -ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

திரு  இருதயராஜ், திருமதி ராஜம் ,


மகன் ஜாண் பீட்டர், மகள் சகாய அனுஷா

குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தைபீட்டர் ஆனந்த் அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


3- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.