கோவா இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். இது வடக்கில் தெரகோல் ஆறு(கோவாவை மகராஷ்டிரத்திலிருந்து பிரிப்பது), தெற்கில் கர்நாடகம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலை, மேற்கில் அரபி கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கோவாவின் மொத்தப் பரப்பளவு 3,702 ச.கி.மீ. இங்கு பேசப்படும் மொழிகள் கொங்கணி, மராத்தி. கோவாவின் மொத்த மக்கள்தொகை 14,57,723. இதில் 65%இந்துக்களும், 26%கிறிஸ்தவர்களும், 6%இஸ்லாமியர்களும், மற்றவர்கள் 3% ம் உள்ளனர்.போர்த்துக்கீசியத்தைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்பவர் 1498ல் இந்தியாவுக்கு கடல் வழிப் பாதையைக் கண்டறிந்து கேரளா(கோழிக்கோடு அருகிலுள்ள காப்பக்கடவு)வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து போர்த்துக்கீசியர்களும் வந்தனர். 1510இல் அல்போன்சா டி அல்புக்கிர்க் என்னும் போர்த்துக்கீசியர் விஜய நகர அரசு உதவியுடன் கோவாவைக் கைப்பற்றினார். கோவாவில் இருந்து கடல்வழி வர்த்தகம் தொடங்கியது.
அதே போல் போர்த்துக்கீசியத்தில் இருந்து 1542ல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சேசு சபைத் துறவி பிரான்சிஸ் சவேரியாரின் வருகைக்கு பின் கிறிஸ்தவம் பரவியுள்ளது.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், கோவா போர்த்துக்கீசியர் வசமே இருந்துள்ளது. 1961இல் ஆபரேசன் விஜய் என்னும் ராணுவ நடவடிக்கை மூலம் போர்த்துக்கீசியரிடமிருந்து கோவா மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோவாவில் வாஸ்கோடகாமா பெயரில் ஓர் ஊர் ஒன்றும் இன்று உள்ளது. இனி கோவாவில் பார்த்த சர்ச்சுகள் மற்றும் இடங்கள் பற்றிக் கூறுகிறேன்.பழைய கோவா ‘கிழக்கின் ரோமாபுரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் தவிர மற்றவர்கள் கண்ணில் அதிகம் படாத கடற்கரையில் இருக்கிறதுகாஜேட்டான் தேவாலயம் (Church of St. Cajatan). தியேட்ரின் குருமரபைச் சேர்ந்த முதல் குருவான புனித காஜேட்டான் அவர்களின் நினைவாக, 1661ல் இத்தாலியச் சிற்பிகளால் ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வடிவில் கட்டப்பட்டுள்ள புனித உபகாரஅன்னையின் தேவாலயம் இது. ரோம் புனித பீட்டர்ஸ் தேவாலயம் இதைவிட ஆறுமடங்கு பெரியது என்கிறார்கள். ஆனால், காஜேட்டான் ஆலயமே உள்ளே நுழையும் போது நம்மைப் பிரமிக்க வைக்கிறது.கத்தீட்ரல் தேவாலயம் (St. Catherine’s’ Cathedral)மிகப் பெரிய ஒன்று. 35.56 மீட்டர் உயரமும், 76.2 மீட்டர் நீளமும், 55.16மீட்டர் அகலமும் உடையது. போர்த்துக்கீசியர்களின் அடையாளமாக விளங்க வேண்டும் என்பதற்காக போர்த்துக்கீசிய அரசர் டாம் செபஸ்டியோ 1562 ஆம் ஆண்டில்மிகப்பெரிய தேவாலயம் கட்ட ஆணை பிறப்பித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்து கோவாவை ஆட்சி செய்த வைசிராய்களால் ஆலயம் கொஞ்சம்கொஞ்சமாக எழுப்பப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் உட்புறங்களில் கலை வேலைப்பாடுகள் நம் கண்களை வியக்க வைக்கின்றன.இதன் பின்புறம் உள்ள தொல்பொருளார் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தின் பல்வேறு கலை நுட்பமும் நாம் அவசியம் காண வேண்டியதே!கத்தீட்ரல் தேவாலயத்தின் இடப்புறத்தில் சுமார் நூறு மீட்டர் தூரத்தில் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது. புனித பிரான்சிஸ் சவேரியார் 1552ஆம் ஆண்டு இறையடி சேர்ந்த பின்பு, அவரது பதப்படுத்தப்பட்ட உடல் இவ்வாலயத்தில்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.எனவே, இவ்வாலயம் இன்று புனித சவேரியார் தேவாலயம் என்றே அறியப்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகமான ஆலயங்களில் ஆல்டரின் இரு பக்கங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள பழைய ஓவியங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. பல சர்ச்சுகளின் அருகிலேயே தொல்பொருளாரின் ஆர்ட் காலரி, அருங்காட்சியகம் இருக்கின்றன, தவறாமல் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment