Tuesday 18 September 2012

கோவா பயணம் - 01


கோவா பயணம் நெல்லையிலிருந்து கிளம்பும் ஹாப்பா எக்ஸ்பிரஸில் காலை 5.55 மணிக்குத் தொடங்கியது. கொங்கன் ரயில்வேயில் பகலில் செல்லும் பயணம் மிக அருமையாக இருந்தது. மலைகளும்,குகைகளும்,மரங்களும்,நீரோட்டங்களும் அப்பப்பா….!ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் இயற்கை வளமும்,செழிப்பும் குறித்து பெருமிதம் கொள்ள முடியும்.கேரளாவிற்குச் செங்கோட்டை, போடி மெட்டு, கம்பம் மெட்டு, வால்ப்பாறை போன்ற வழிகளில் செல்லும் போது தேயிலைத் தோட்டமும், தொழிலாளர்கள் வீடுமாகத்தான் தெரியும்.அதிக ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பு கொண்ட மாநிலம் போலத் தோன்றும்.
ஆனால், திருவனந்தபுரம் வழியாக இத்தடத்தில் பயணம் செய்யும் போது, கொல்லம் முதல் கோழிக்கோடு தாண்டியும் – கேரளா இயற்கைச் செழிப்பும், மக்கள் வாழ்க்கை செழிப்பும் கொண்டதாகவே இருக்கிறது.
ஒவ்வொரு ஊர்களிலும் அலங்கரிக்கப்பட்ட அங்காடிகள் அதிகமாக இருப்பது, அவர்களின் மிகுதியான நுகர்வுக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது. ஆலப்புழா, கொச்சின், எர்ணாக்குளம் போன்ற ஊர்களைத் தனி ட்ரிப்பாக வந்து பார்க்கவேண்டும் என்ற அவா பிறக்கிறது. போகும் வழியெல்லாம் எண்ணற்ற ஆறுகள் குறுக்கே செல்கின்றன.
                                           
அனைத்துஆறுகளும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி அரபி கடலில் கலப்பதற்கு மேற்கு நோக்கியே பாய்கின்றன. தமிழகத் தளப்பகுதி போல வறண்ட பகுதி கொஞ்சமேனும் எங்கும் காண முடியவில்லை. கண்ணில் படுவதெல்லாம் தென்னை,தென்னை,தென்னை! மீதம் பலா,வாழை,கமுகு! ஒவ்வொரு வீடும் இன்ப வனமாகக் காட்சியளிக்கிறது.
கண்ணனூர், காசாரக்காடு தாண்டியவுடன் இருட்டத்தொடங்கியது. தொலைதூர வண்டிகளில் உள்ளது போன்ற பான்ரிக்கார் இந்த ஹாப்பா எக்ஸ்பிரஸில் இல்லை(எதிர்காலத்தில் இணைக்கப்படலாம்). எனவே நினைத்தபோது குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ ஏதும் வாங்க முடிவதில்லை. வாடிக்கையாக வருபவர்கள் உணவு,ஸ்நாக்ஸ் எல்லாம் தயாராக கையில் எடுத்து வந்து விடுகிறார்கள். ஆனால்,நம்மைப் போன்றவர்களுக்கு சில நேரங்களில் தண்ணீர்,டிபன் வாங்குவதுகூட சிரமமாகிவிடுகிறது. அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது வண்டி. இரண்டு மணிநேரம் தாமதம் என்றார்கள்.
அங்கிருந்து பழைய கோவாவிலுள்ள சவேரியார் ஆலயத்தோடு இணைந்துள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினோம். காலையில் சவேரியார் ஆலயத்தில் தமிழ்த் திருப்பலியை நம் தந்தை ஆற்றியபின், கோவாவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். போகும்முன் கோவாவைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளது நன்று.

No comments:

Post a Comment